Tuesday, December 04, 2007

சென்னையில் மாணவ ரெளடிகள்!

சம்பவம்: 1
சென்னை அரும்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் +1, +2 மாணவர்களுக்கு இடையே
நடந்த கிரிக்கெட் போட்டியில் மோதல் ஏற்பட்டு அடிதடி நடந்துள்ளது. மோதலில் ஈடுபட்ட
மாணவர்கள் பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்று பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே மீண்டும் மாணவர்களிடையே அடிதடி நடந்துள்ளது.
தகராறில் ஈடுபட்ட மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து ஆசரியர்கள் பிரம்பால்
அடித்துள்ளனர். அடிபட்ட மாணவர்கள் காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம்: 2
சென்னை திருவெற்றியூரில் காலை பிரேயரின்போது நகம்வெட்டிக்கொண்டிருந்த
மாணவனைக் கண்டித்த ஆசிரியரை அந்த மாணவன் தாக்கியுள்ளான்.

நான் படித்தகாலத்தில் படிக்காத முரட்டு பிள்ளைகளை பள்ளியில் கொண்டு
விடும் பெற்றோர் "வாத்தியாரய்யா எம்மவன் ஒழுங்கா படிக்கலைனா
அடிச்சு தோலை உறிச்சுருங்க" என்று சொல்லி விட்டுச்செல்வர்.
எனது கணக்கு வாத்தியார் (பெயர் நடராஜ் என்று ஞாபகம்) கணக்கை
தவறாகப்போட்டால் பிரம்பால் பிருஸ்டத்தில் அடிப்பார். (அவரது வகுப்பு
இருக்கும் நாட்களில் அடிதாங்குவதற்காக ஒன்றின்மேல் ஒன்றாக இரண்டு
டவுசர்கள் அணிந்து செல்வோம் என்பது தனிக்கதை) ஆனால் ஒருநாளும்
ஆசியர் அடித்ததாக பெற்றோரிடம் புகார் செய்ததில்லை.புகார் செய்தால்
ஏன் படிக்கவில்லை என்று வீட்டிலும் அடிவிழும்.
அந்தக்காலத்தில் ஆசிரியர்கள் மீது ஒரு பயம்கலந்த மரியாதை இருந்தது.
இன்று ஆசிரியர் அடித்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம்,
ஆசிரியர் கைதுசெய்யப்படலாம் என்ற நிலைமை உள்ளது.
இதன் விளைவு ஆசிரியர் மீது பயமோ, மரியாதையோ இருக்காது.
ஆசிரியரும் கடமைக்கு கரும்பலகையில் எழுதிப்போட்டுவிட்டுச்
செல்வாரேயானல் நமது வருங்கால சந்ததியின் எதிர்காலம் என்னாகும்?
கண்டித்த ஆசிரியரையே ஒருமாணவன் திருப்பித்தாக்குகிறான் என்றால்
அவனுக்கு அந்த தைரியம் எங்கிருந்து வந்தது?
நாங்கள் தவறு செய்வோம் ஆனால் எங்களை யாரும் கண்டிக்கவோ,
தணடிக்கவோ கூடாது என்றால் யார் இவர்களைத்திருத்துவது?

எச்சரிக்கை:
நாம் ஒரு பொறுப்பற்ற பொறுக்கிகள் நிறைந்த சமூகத்தை உருவாக்கிக்
கொண்டிருக்கின்றோம்.இதன் பின்விளைவுகள் மிகமோசமாக இருக்கும்.

4 comments:

நாஞ்சில் பிரதாப் said...

//.அவரது வகுப்பு
இருக்கும் நாட்களில் அடிதாங்குவதற்காக ஒன்றின்மேல் ஒன்றாக இரண்டு
டவுசர்கள் அணிந்து செல்வோம் என்பது தனிக்கதை//

அதெப்படிங்க அவ்ளோ கரெக்டா சொல்றீங்க...நாமும் அதே கேஸ்தான்.

//எச்சரிக்கை:
நாம் ஒரு பொறுப்பற்ற பொறுக்கிகள் நிறைந்த சமூகத்தை உருவாக்கிக்
கொண்டிருக்கின்றோம்.இதன் பின்விளைவுகள் மிகமோசமாக இருக்கும்//

மிகச்சரியாக சொன்னீஙக...ஆறில் வளையாதது அறுபதிலும் வளையாது ன்னு சும்மாவா சொன்னாங்க

நக்கீரன் said...

//அதெப்படிங்க அவ்ளோ கரெக்டா சொல்றீங்க...நாமும் அதே கேஸ்தான்.//

நீங்களும் கணக்குல வீக்கா?
வருகைக்கு நன்றி பிரதாப் குமார்.

வவ்வால் said...

////.அவரது வகுப்பு
இருக்கும் நாட்களில் அடிதாங்குவதற்காக ஒன்றின்மேல் ஒன்றாக இரண்டு
டவுசர்கள் அணிந்து செல்வோம் என்பது தனிக்கதை//

எங்கள் பள்ளியிலும் அடிப்பார்கள் பிருட்டத்தில் அல்ல சரிய முட்டிக்கு கீழ காலில் பிரம்பு விளையாடும்(போலீஸ் முட்டிக்கு கீழ சுடுவது போல), மாணவன் ஓடி விடாமல் இருப்பதற்காக ஒரு கையை வேறு பிடித்துக்கொள்வார்கள், அடிக்கும் போது ஓடி , ஆடி அவரையே ஒரு ரவுண்டு அடிப்போம்.

இதில் ஒரு டெக்னிக் இருக்கு அடிக்கும் போது அதிகம் துள்ளாமல், சத்தம் போடாமல் இருந்தால் எக்ஸ்ட்ரா அடி கிடைக்கும், அதனால் ஒரு அடிப்பட்டதும் அய்யோ, அம்மா என்று பலமா சத்தம் போட்டு துள்ளிக்குதிப்போம்!

இப்போதெல்லாம் மேல கைய வைக்க விடமாட்டாங்க போல பசங்க , ஆனாலும் இப்போது 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களே கல்லூரி மாணவர்கள் போன்று நடந்துக்கொள்கிறார்கள். புரசைவாக்கத்தில், புரசைவாக்கம் நெடும்சாலையில் இருக்கும் ELS மேல் நிலைப்பள்ளிப்பக்கம் காலையில் போய் பாருங்கள், பள்ளிக்கு வரும் மாணவர்கள், பஸ்ஸின் மீதும், ஜன்னலின் மீதும் நின்று வருகிறார்கள்.அவ்வப்போது ஹான்ஸ், பான் போட்ட எச்சிலை வேறு,துப்புவார்கள் :-))

நீங்கள் ஒரு பள்ளி மாணவனைப்பிடித்து சோதித்துப்பாருங்கள், பாக்கெட்டில், ஹான்ஸ், பான் என்று எதாவது இருக்கும்.

எனக்கு பயமாக இருக்கும் கைப்பிடி தவறி பக்கத்தில் வரும் நம்ம மீது விழுந்து விடுவார்களோ என்று! அதுவும் பேருந்து டிராபிக்கில் மாட்டி நிற்கும் போதெல்லாம் குரங்கு போல பேருந்தில் இருந்து குதிப்பார்கள், சாலையில் நடப்பவர்கள், 2 சக்கர வாகன ஓட்டிகள் தான் ஒதுங்கி போகனும் ,அவர்களுக்கு அக்கம் பக்கம் பற்றி கவலையே இல்லை.

நக்கீரன் said...

வருகைக்கு நன்றி வவ்வால்.
இன்றைய மாணவ சமுதாயத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads