Thursday, November 29, 2007

ஒரு சென்னை வாசியின் புலம்பல்.

சென்னையின் மிகப்பெரிய பிரச்சனை போக்குவரத்து நெரிசல்.
கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் எப்போது முடிவடைந்து
எப்போது திறப்பு விழாகண்டு இந்தப்பிரச்சனை தீரும் என்று
தெரியவில்லை.
எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல நெடுஞசாலைத்
துறையும், சென்னை மாநகராட்சியும் செய்யும் தொல்லை
தாங்க முடியவில்லை. சாலையோரம் சேரும் மண்ணை
அகற்றுகிறோம் என்று சொல்லி சாலையின் பாதியை
அடைத்துக் கொள்கிறார்கள். சாலையை சுத்தப்படுத்துவது
நல்ல விசயம்தானே இதற்க்குப் போய் ஏன் அலுத்துக்கொள்கிறாய்
என்கிறீர்களா?. ஆனால் அதற்கும் நேரம் காலம் இருக்கிறதல்லவா?

போக்குவரத்துக் குறைவாக இருக்கும் மதிய நேரம் அல்லது இரவில் சுத்தப்படுத்தலாமே?
அல்லது விடுமுறை நாட்களில் சுத்தப்படுத்தலாம். ஆனால் இவர்கள் செய்வதென்ன?

வடபழனி 100 அடி சாலை சாதரணமாகவே காலையில் போக்குவரத்து
நெரிசலில் பிதுங்கும். அதிலும் முகூர்த்த நாளன்று கேட்கவே வேண்டாம்.
ஆனால் சொல்லி வைத்தார்போல் முகூர்த்த நாளன்று காலையில்தான்
பாதி சாலையை அடைத்துக் கொண்டு கருமமே கண்ணாக வேலை செய்கிறார்கள்.
அது போன்ற நாட்களில் கோயம்பேட்டிலிருந்து கிண்டி செல்வதற்கு 1 மணி
நேரத்திற்கு மேலாகிறது.
உத்தரவிடும் உயர்ந்த பதவியிலிருப்பவர்களுக்கு மூளையே கிடையாதா?
அல்லது யோசிக்கவே மாட்டார்களா?

Tuesday, November 27, 2007

பாம்பாட்டிக்கு பாம்பால் சாவு - மூன்றாவது கோணம்.

தான் செய்ய அச்சப்படும் எதையாவது மற்றவர்கள் செய்தால் அவர்களுக்கு அதனாலேயே அழிவு என்று சொல்லி வக்கிரமாகச் சந்தோசப்படுவது மனித இயல்பு.
இதுவும் அப்படி அதீத அச்சத்தால் சொல்லப்பட்டதுதான். பாம்பைக்கண்டு பயந்தவர்கள்தாம் அதிகமாக பாம்புகளால் மரணமடைகின்றனர், பாம்பாட்டிகள் அல்ல.
யானையும் பாகனுக்குக் குறி வைப்பதில்லை. மதம் பிடித்துக் கூட்டத்தை நோக்கி ஓடும் யானையை அடக்க வேண்டும் என்ற பொறுப்பு உணர்வோடு தங்கள் உயிரையே பணயம் வைத்துச் செயல்படும் பல பாகர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஓரிருவர் உயிரிழக்கக்கூடும்.
பாம்பு, யானை இருக்கட்டும்.... உங்கள் வாகனத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல் ஓட்டிச் சென்றால், அதுகூட ஆபத்துதான்.எதையுமே முழுமையாகப் புரிந்துகொண்டு கையாண்டால் பாம்பு, புலி, யானை, வாகனம், வாழ்க்கை எதுவுமே ஆபத்தல்ல.
-ஆனந்த விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

Sunday, November 25, 2007

நிலவில் தெரிந்த சாய்பாபா?


இஸ்ரோ தலைவர், இந்தியா விரைவில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப இருப்பதாக அறிவித்த நாளில், நிலவில் சாய்பாபா உருவம் தெரிவதாக சென்னையில் ஒரு வதந்தி பரபரப்பாக உலாவந்தது. நானும் மொட்டை மாடிக்குப்போய் ஆர்வமாக பார்த்தேன். எனக்கு பாட்டி வடைசுட்டதுதான் தெரிந்தது. என் மனைவியை அழைத்துக் காட்டினேன். அவளுக்கு ஷிரிடி சாய்பாபா தெரிவதாகச் சொன்னாள். என் சகோதரி பார்த்து விட்டு புட்டபர்த்தி சாய்பாபா தெரிவதாகச் சொன்னார். என்னடா இது என்று மீண்டும் நான் வேறு கோணத்தில் பார்த்தேன் அப்போது எனக்கு தலைப்பாகை இல்லாத விவேகானந்தர் முகம் போலத்தெரிந்தது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் என் மகளை அழைத்துக் காட்டினேன் "டாடி எனக்கு பாட்டி வடை சுடறதுதான் தெரியுது. ஆனா காக்காயத்தான் காணோம்" என்றாள்.
ஆக நிலாவின் மேடு பள்ளங்களால் ஏற்படும் நிழல் அவரவர் கற்பனைக்கு ஏற்றார் போல் உருவங்களாய் தோன்றுகிறது. (எப்படி என் கண்டுபிடிப்பு?). நேற்றும் பவுர்ணமி நிலவைப் பார்த்தேன். என் மனைவியை அழைத்து உன் முகம் தெரிகிறது பார் என்றேன்.அடிக்க வந்தாள். நண்பர்களே நீங்களும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் உங்களுக்கு என்ன உருவம் தெரிகிறதென்று.

Friday, November 16, 2007

ரத்தக் கண்ணீர்

வலைப் பதிவில் முதல்முறையாய் கதை சொல்லப்போறேன்! எல்லாரும் ஒரு முறை ஜோரா கைதட்டுங்க பார்க்கலாம்.
சிரிக்காதீங்க, இது சிரிப்புக் கதை இல்லீங்க. சீரியஸ் சோகக் கதை. அதனால எல்லாரும் கிளிசரினோ இல்ல சின்ன வெங்காயமோ
கைல வச்சுக்கங்க. பின்ன கண்ல தண்ணி வரணும்ல.

எச்சரிக்கை:

1.பகலெல்லாம் கண்முழிச்சு தமிழ் சீரியல் பார்த்து அழுது தீர்த்த தாய்மார்கள் இதைப் பார்க்க வேண்டாம்.

2.காதலன் அல்லது காதலி சாயங்காலம் 5 மணிக்கு பீச்சுக்கு வர்ரேனு சொல்லிட்டு அல்வா கொடுத்ததால தனியா சுண்டல்
வாங்கித் தின்று கடுப்பான காதலர்கள் அல்லது காதலிகள் இதைப் படிக்க வேண்டாம்.

3.அறிவாலயத்திலிருந்து போயஸ்கார்டனுக்கு ரூ.150 ரேட் பேசி ஆட்டோ ஏறி கார்டனில் இறங்கியதும் ரூ.300 கேட்டு
அடாவடி செய்த ஆட்டோ டிரைவரிடம் தோத்துப் போய் தண்டம் அழுத திருவாளர்கள் இதைப்படிக்க வேண்டாம்.

4.ஆட்டோதான் அடாவடி நான் டூவீலராக்கும் என்று வீராப்புப் பேசி டூவீலரில் சென்று கிண்டி கத்திப்பாரா சந்திப்பில்
VIP ( வேலை வெட்டி இல்லா பெர்சன் ) வருகைக்காய் நிறுத்தப்பட்ட போக்குவரத்தில் மணிக்கணக்கில் சிக்கிச்சீரழிந்து தாமதமாய்
அலுவலகம் போய் மேலதிகாரியிடம் வாங்கிக்கட்டிக் கொண்டவர்கள் இதைப்படிக்க வேண்டாம்.

5.தீபாவளி ரிலீஸ் அழுகிய தமிழ்ப் படங்களை A.C தியேட்டரில் வேர்க்க விறுவிறுக்க படம் பார்த்து நொந்து நூலானவர்கள்
இதைப்படிக்க வேண்டாம்.

"வேண்டாம்.....வேண்டாம்னு ஆத்திச்சூடி மாதிரி சொல்லிக்கிட்டே போற. வேற யார்தான்யா படிக்கறது."

"அவசரப்படாதீங்க. இவ்வளவு தூரம் படிச்சுட்டீங்க பொறுமையா இன்னும் கொஞ்சம் படிங்க."

"அதுசரி கதைய எப்ப ஆரம்பிப்ப?"

"இப்பத்தான அவசரப்படாதீங்கன்னு சொன்னேன். கதைல ஒரு கனவு song வருது, ஹீரோ ஹீரோயின் சந்திரமண்டலத்துல ஒரு டூயட்டுக்கு
ஆடராங்க அதுக்கு எப்படி செட் போடலாம்னு டிஸ்க்கஸ் பண்ண சங்கரை வரச்சொல்லீருக்கறேன். அதுபோக பாலா, மணிரத்னம், ஹரி, முருகதாஸ்னு
பெரிய பட்டளமே வருது.விவாதம் முடிச்சு எப்படியும் பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணிடுவேன். என்ன கண்ணுல ரத்தம் வருதா? அதாங்க "ரத்தக் கண்ணீர்"
நானும் நல்லா மொக்கை போடரேன்ல? ஐயோ யாரோ அடிக்க வாராங்க. எஸ்கேப்..........."

Wednesday, November 14, 2007

பாமரன்கேள்விகள்?

அஹிம்சாவாதி அண்ணல் காந்தியடிகள் ஆரம்பித்த காங்கிரஸ் இன்று கொலைகாரர்களின் கூடாரமாகிப்போனதே அதைத் தடுக்கவோ தட்டிக்கேட்கவோ திராணியில்லாத இளங்கோவனுக்கு, தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல்பா எழுதிய கலைஞரை தட்டிக்கேட்க என்ன அருகதை இருக்கிறது?

Tuesday, November 13, 2007

பத்து நிமிடத்தில் கவிதை எழுத கற்றுக்கொள்ளுங்கள்

பத்து நிமிடத்தில் கவிதை எழுத கற்றுக்கொள்ளுங்கள்.
மிக எளிய பயிற்சி. செய்முறை விளக்கமும் உண்டு.
பெண்களுக்கு பெண்களால் கற்றுத்தரப்படும்.
மிகக் குறைந்த கட்டணம். கவிதை பத்து நிமிடத்தில் வரவில்லை எனில் காசு திரும்ப தரப்படும். இந்த விளம்பரத்தை மின் அஞ்சல் செய்பவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி உண்டு.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ரசிகன்

எம்மிடம் பயிற்சி பெற்ற சிலரின் கருத்துக்கள்
"என்னால நம்பவே முடியல. பத்து நிமிடத்தில் கத்துக்குடுத்துட்டாங்க. அங்க கத்துக்கிட்டு நான் எழுதுனதுதான் ராமாயணம்".
-கம்பர்

"எனக்கு ஹைக்கூ எழுத கத்துக்குடுத்தாங்க. பத்தே நிமிடம்தான்.1330 ஹைக்கூ எழுதி திருக்குறள்னு புக்கே போட்டுட்டேன்னா பார்த்துக்குங்க.
- திருவள்ளுவர்


Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads